அண்மையச்செய்திகள்

Saturday 27 May 2017

மாட்டுக் கறிக்கு தடைவிதித்துள்ள மோடி அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது

மாட்டுக் கறிக்கு தடைவிதித்துள்ள மோடி அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
"""""""""""""""""""""""""""
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடைவிதித்துள்ள மத்திய மோடி அரசிற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, உடனடியாக இவ்வறிப்பை திரும்ப பெற வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை மோடி அரசை வற்புறுத்துகிறது.
கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யும் வர்த்தக விதிமுறையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ள மோடி அரசு அந்த ஆணையை நாடுமுழுவதும் நடைமுறைப் படுத்துவதற்கு உடனடி அறிவிப்பும் செய்திருக்கிறது.
இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடு, கன்று குட்டி, எருமை, ஒட்டகம் போன்ற கால்நடைகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருப்பது தாழ்த்தப்பட்ட, இசுலாமிய குறிப்பாக உழைக்கும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்கள் மீது திணிக்கப்பட்டிரும் உணவுப் பண்பாட்டு உரிமை மீறலையும், பொருளியல் ஒடுக்குமுறையையுமே காட்டுகிறது.
பசுவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஆணையின் மூலமாக மத சுதந்திரம், தனிமனித சுதந்திரம், மதச்சார்பற்ற தன்மை, போன்ற அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் விதத்தில் ஆர்.எஸ்.எஸ்.ன் செயல் திடங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப் படுத்துகிறது, இந்த அதிரடி அறிவிப்பின் மூலமாக,
இப்படியான அறிவிப்பு ஏதோ இசுலாமிய மக்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குலாக நாம் குறுக்கிப் பார்த்துவிட முடியாது, பிற்படுத்தப்பட்ட உழவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கின்ற நோக்கில், ஏற்கனவே பயிர்கள் கருகி உயிரை மாய்த்துக் கொண்டிருக்கும் உழவர்களை மேலும் முடக்கி அழிக்கும் எண்ணத்தோடு, சந்தைகளில் மாடுகளை விற்கும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் என்று நடைமுறைக்கு ஒவ்வாத பெரிய பட்டியலையே அறிவிப்பு செய்திருக்கிறது.
மேலும் இறைச்சி சமைக்கும் இல்லங்களில் இது என்ன இறைச்சி என்று ஆய்வுகளும் நடத்தப்படும் என வட மாநிலங்களில் நடந்தேறிய மனிதனின் தோலை உரித்த கோர நிகழ்வுகளை சுட்டிக்காட்டி அச்சுறுத்தும் அறிவிப்பும் அதில் அடங்கியுள்ளது.
இது சம்மந்தமாக மாநில அரசுகளிடம் எவ்வித கருத்தும் கேட்காமல் மத்தியில் முழுபலத்துடன் இருக்கிறோம் என்ற அகந்தையில் மாநில அரசுகளின் மாநில சுய சார்பு உரிமையில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள இயலாதது.
எனவே தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களுக்கும் இசுலாமிய, பிற்பட்ட உழவர் பெருமக்களுக்கும் எதிரான இந்த அறிவிப்பை மத்திய மோடி தலைமையிலான பா.ச.க அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துவதோடு, இந்த அறிவிப்பு ஆணைக்கு எதிராக தமிழக அனைத்து மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலத்தை முற்றுகையிடும் போராட்டத்தை ஆதித்தமிழர் பேரவை விரைவில் அறிவிக்கும் என மோடி அரசிற்கு எச்சரிக்கை விடுகிறது.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை
27.5.2017.

No comments:

Post a Comment