அண்மையச்செய்திகள்

Tuesday 26 April 2016

மலம் எடுக்க ஒரு ஜாதி - அர்ச்சனை செய்ய ஒரு ஜாதியா? : அதியமான் ஆவேசம்!

மலம் எடுக்க ஒரு ஜாதி - அர்ச்சனை செய்ய ஒரு ஜாதியா? : அதியமான் ஆவேசம்!
18.4.2016 அன்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை முன் மறியல் போராட்டம் நடைபெற்றது. இம்மறியல் போராட்டத்தில் பங்கேற்ற ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அ.அதியமான் அவர்கள் உரையாற்றினார்.
தந்தை பெரியார் தன்னுடைய இறுதி உரையில், ஒழிக்கவேண்டிய சூத்திரப்பட்டத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய அவசியத்தை அவர்கள் பல்வேறு கட்டங்களில் முன்னிறுத்தினார்கள். அந்த வகையில், இன்றைக்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற தீர்ப்பை செயல்படுத்தாமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருக்கின்ற அந்த நிலைக்கு மாற்றாக, அதை அனுமதிக்கவேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து இன்றைக்கு இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - மதிப்பிற்குரிய தமிழினத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் முன்னிலையில்.
இன்றைக்குத் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் இருவேறு நிலைகள் இருக்கின்றன. ஒரு பக்கம் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள் மலம் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் பார்ப்பனர்கள் மட்டுமே கோவில் கருவறைகளில் அர்ச்சகர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரையில் கோவிலும் தேவையில்லை, அர்ச்சகரும் தேவையில்லை. இருந்தபோதிலும், சமத்துவ நோக்கில் அதில் அனைவருக்கும் பங்கு வேண்டும் என்று நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
அதேபோல, அனைத்து மக்களும் துப்புரவுப் பணி என்பது இல்லாமல் இந்த நாடு இயங்க முடியாது. ஆனால், அதிலும் நாம் என்ன கேட்கிறோம் என்று சொன்னால், அதனை நவீனப்படுத்தி, அனைத்து மக்களும் அதில் கலந்துகொள்கின்ற ஒரு வாய்ப்பை உருவாக்கவேண்டும் என்றுதான் கேட்கிறோம்.
எப்படி அந்த மலம் அள்ளும் துப்புரவுப் பணியில் நவீன இயந்திரங்களை உருவாக்கி, அதில் அனைவரும் பங்கு கொள்ளவேண்டுமோ, அதேபோல, அனைத்து ஜாதியினரும் - யார் எல்லாம் ஆன்மீகத்தில் அக்கறை உள்ளதோ, யாரெல்லாம் அதில் பயிற்சி பெற்று இருக்கிறார்களோ, கடைசி தட்டிலே இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட, தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறவர்களும், ஆன்மீகத்திலே அக்கறை உள்ளவராக இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கும் அந்தக் கருவறையில் இடம்வேண்டும் என்கிற தந்தை பெரியாருடைய கொள்கையின் அடிப்படையில், இந்தப் போராட்டம் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டம் என்பது அடுத்த தலைமுறைக்கான - சுயமரியாதைக்கான ஒரு போராட்டமாகும். அடுத்த தேர்தலில் நாம் பதவிக்கு வருவதற்கான போராட்டம் அல்ல. அடுத்த தலைமுறைக்கான போராட்டம் - அய்யா ஆசிரியர் அவர்களின்மூலம் கட்டாயம் வெற்றி பெறும், வெற்றி பெறும் என்று கூறி முடிக்கிறேன். நன்றி, வணக்கம்!

No comments:

Post a Comment