அண்மையச்செய்திகள்

Tuesday 15 March 2016

ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ஆதித்தமிழர் பேரவையினர் 47 பேர் கைதாகி விடுதலை

ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி மார்ச் 10 '2016 அன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க, மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ‘ஐகோர்ட்டில் தமிழ் போராட்டக்குழு‘ சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளை முன்பு நேற்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று சமீபத்தில் ஐகோர்ட்டு பதிவுத்துறை உத்தரவிட்டிருந்தது. இதனால், ஐகோர்ட்டு கிளை முன்பு நேற்று காலை ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இருந்தபோதிலும், பகத்சிங் தலைமையில் நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தமிழ் தமிழர் இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, தியாகி இம்மானுவேல் பேரவை, ஆதித்தமிழர் பேரவை, புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் கருப்புக்கொடியுடன் ஐகோர்ட்டு கிளை முன்பு கூடினர்.

தள்ளுமுள்ளு

அவர்கள், ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்துவதால் கைது செய்யப்போவதாக தெரிவித்தனர். சில போலீசார் போராட்டக்காரர்களிடம் இருந்து கருப்புக்கொடியை பறித்தனர். அந்தசமயத்தில், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்பின்பு, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேரை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். பின்னர், அவர்கள் அனைவரும் நரசிங்கம் ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை கைது

போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் கருப்புக்கொடி போராட்டம் தொடர்பான நோட்டீசை கணினி மூலம் தயாரித்துக் கொடுத்தவர் ஆவார்.

நோட்டீசில் எந்த ஆட்சேபத்துக்குரிய வாசகமும் இல்லாதநிலையில் மாற்றுத்திறனாளியான அவரை முன்னெச்சரிக்கையாக கைது செய்த ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். இதனால், மண்டபம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.


 http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/03/10015012/Sadly-47-people-arrested-in-High-Court-litigation.vpf

No comments:

Post a Comment