அண்மையச்செய்திகள்

Sunday 10 January 2016

நாகை-மயிலாடுதுறை அருகே பொதுவீதியில் பிணத்தை எடுத்துச் சென்ற தலித் மக்கள் மீது தடியடி, உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் சாதிவெறியர்களுக்கு துணைபோன ஆளும் அ.தி.மு.க காவல்துறையை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.---இரா.அதியமான் அறிக்கை

நாகை-மயிலாடுதுறை அருகே பொதுவீதியில் பிணத்தை எடுத்துச் சென்ற தலித் மக்கள் மீது தடியடி, பெண்கள் பெரியவர்கள் படுகாயம்.

உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் சாதிவெறியர்களுக்கு துணைபோன ஆளும் அ.தி.மு.க காவல்துறையை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.
"""""''''"""""'''''''
பேரவை நிறுவனர் இரா.அதியமான் அறிக்கை

கடந்த சனவரி - 3 ஆம் தேதியன்று நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வழுவூர் கிராத்தை சார்ந்த திருநாள்கொண்டசேரியில் தலித் சமூகத்தைச் சார்ந்த செல்லமுத்து என்பவர் காலமானார்.

அவரது உடலை பொதுவீதியில் எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்கு அந்த பகுதியைச் சார்ந்த ஆதிக்க சாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனால், கடந்த நான்கு நாட்களாக அவரது உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை உருவானது.

அதன் காரணமாக செல்லமுத்துவின் உடலை பொதுவீதியில் எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்கு போதுமான பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என தலித் தரப்பு தொடுத்த வழக்கின் அடிப்படையில் உரிய பாதுகாப்பு வழங்கிட நாகை மாவட்ட காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவை பின்பற்றி போதுமான பாதுகாப்புகளை செய்து கொடுக்காத காவல்துறையின் அலட்சியத்தின் காரணமாக வழுவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அண்டை பகதியை சேர்ந்த ஆதிக்க சாதியினரும் ஒன்று சேர்ந்து கொண்டு நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் பொதுவீதி வழியாக உடலை எடுத்து செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அப்படி சட்டவிரோதமாக கூடியவர்களை கலைந்து போவதற்கோ, அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கோ, எந்தவித முயற்சியையையும் மேற்கொள்ளாத காவல்துறை, உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்துவதற்கு குறைந்த பட்ச முயற்சியை கூட எடுக்காமல், தலித் மக்களை அச்சுறுத்தி ஊரின் பின்புறமாக உடலை எடுத்து செல்லும்படி வற்புறுத்தினர்.

அதை ஏற்றுக்கொள்ளாத தலித் மக்கள் நீதிமன்ற ஆணையைக் காட்டி பொதுவீதி வழியாக உடலை எடுத்து செல்லுவதற்கு பாதுகாப்பு வழங்குங்கள் என்று தொடர்ந்து காவல்துறையினரிடம் வற்புறுத்தியுள்ளனர், அதன் காரணமாக பிணத்தை பொதுவீதியில் எடுத்துச் செல்ல பாதுகாப்பு கொடுப்பதாக பொய்யான வாக்குறுதியை தந்துள்ளனர்  காவல்துறையினர்.

இப்படி, காவல்துறையினர் கொடுத்த வாக்குறுதியை நம்பிய தலித் மக்கள் நான்கு நாட்களாக கிடந்த உடலை எடுத்துக்கொண்டு, சிறிது தூரம் சென்றதும் திடீரென தடியடி நடத்தி படுகாயம் ஏற்படுத்தி பெண்கள் உட்பட  50.க்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்து தனது நயவஞ்சக செயலை நிறைவேற்றியுள்ளது மட்டுமல்லாமல் காவல்துறையினரே பிணத்தை எடுத்துக்கொண்டு வேறு பாதையில் சென்று அடக்கம் செய்துள்ளனர்.

அரசியல் சட்டப்படி ஒழிக்கட்டப்பட்ட தீண்டாமை, சமூகத்தில் இன்றும் ஒழிக்கப்படாமல் நீடித்துக்கிடக்கின்றது என்பதற்கு, மேலும் ஒரு சாட்சிதான் இந்த சம்பவம், சட்டப்படியோ அல்லது நீதிமன்ற உத்தரவுப்படியோ காவல்துறை தனது நடவடிக்களை மேற்கொண்டிருந்தால் இதைப்போன்ற சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால், தலித் மக்கள் மீது ஒவ்வொறு இடத்திலும் தொடர்ந்து காவல்துறையினர் காட்டும் இந்த அராஜக நடவடிக்கை மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது, சட்டத்தையும் நீதிமன்ற உத்தரவையும் மதிக்காத தமிழக காவல்துறை சாதிவெறியர்களுக்கே துணைபோவது மிகவும் வேதனையளிக்கிறது.

எனவே தமிழக அரசு உடனே முன்வந்து பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி தலித் மக்களை உடனடியாக விடுதலை செய்து உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும், மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் சாதி ஆதிக்கத்தோடு செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செயது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவண்..
ஒடுக்கப்பட்ட
விளிம்பு நிலை மக்களின்
விடுதலைப்பணியில்..
இரா.அதியமான், நிறுவனர்,
அதித்தமிழர் பேரவை

No comments:

Post a Comment