அண்மையச்செய்திகள்

Wednesday 9 December 2015

துப்புறவு தொழிலாளர் நலன்களுக்காக பாடுபடும் ஆதித்தமிழர் பேரவை தலைவர் தோழர் அதியமான் - தோழர் தமிழச்சி அவர்களின் முகநூல் பதிவு ""(உங்கள் மலத்தை அள்ள ஒரு சாதி இருக்க வேண்டும். உங்கள் குப்பையை அள்ள ஒரு சாதி இருக்க வேண்டும் என்றால்?)"" என்ற தலைப்பில்

தமிழச்சி‬ (Tamizachi)·Wednesday, December 9, 2015 (முகநூல் பதிவு )

உங்கள் மலத்தை அள்ள ஒரு சாதி இருக்க வேண்டும். உங்கள் குப்பையை அள்ள ஒரு சாதி இருக்க வேண்டும் என்றால்?
அனைத்தையும் அழித்துச் சென்ற வெள்ளம் மக்களை ஒன்றிணைத்து சென்றிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அது எதுவரை என்ற கேள்வி நம் முன்னே நிற்கிறது.
உணவு உடை அத்தியாவசிய பொருட்களை கொடுத்த தன்னாவலர்கள் வெள்ளம் விட்டுச் சென்ற மலைபோல் குவிந்துள்ள குப்பைகளையும், இறந்து கிடக்கும் மிருகங்களையும், அதன் தூர்நாற்றங்களையும், மழைப் பெருக்கால் வெளியேற்றப்பட்ட மனிதக் கழிவுகளையும் கண்டு திகைத்து நிற்கிறார்கள். ‘இது அரசு செய்ய வேண்டிய பணியல்லவா?’ என்று கருதுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்கள்கூட தங்கள் பகுதியில் உள்ள கழிவுகளை அரசு அல்லது வேறு யாராவது சுத்தம் செய்ய மாட்டார்களா? என்று காத்திருக்கிறார்கள்.
வெள்ள நிவாரணப்பணிகளில் தீவிரமாக செயல்படாத அரசுகூட பெரும் மலையளவு குவிந்துள்ள குப்பைகளை எப்படி அப்புறப்படுத்துவது என்று பெரும் நெருக்கடியோடு யோசித்துக் கொண்டிருக்கிறது.
சென்னையில் மட்டும் அரசு துப்புறவு தொழிலாளர்கள் 20,000 இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். வருணாசிரம அடிப்படையில் ‘பஞ்சமர்கள்’ என்று சுட்டிக்காட்டப்படுபவர்கள். சென்னை முழுவதும் உள்ள பெரும் குப்பை கூளங்களை இவர்களால் எப்படி அப்புறப்படுத்த முடியும்?
எனவே, தமிழக அரசு கோவை மற்றும் வேறு பகுதிகளில் இருந்து 4,000.க்கும் மேற்பட்ட துப்புறவு தொழிலாளர்களை வரவழைத்து, சென்னையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தி உள்ளது. இத்தொழிலாளர்களும் வர்ணாசிரம அமைப்பின்படி பஞ்சமர்கள்.
தமிழக அரசின் இப்போக்கை துப்புறவு தொழிலாளர் நலன்களுக்காக பாடுபடும் ஆதித்தமிழர் பேரவை தலைவர் / தோழர் அதியமான் கடுமையாக கண்டனம் செய்கிறார்.
"மழை வெள்ள பாதிப்புக்குள்ளான சென்னையை மீட்க தமிழக அரசு வர்ணசாதி முறையில் நடவடிக்கை மேற்கொள்கிறதா? என்ற மனக்குமுறலை எத்தனை தமிழர்களால் உணர முடிந்தது?
தூய்மைப்பணி என்றால் அது தாழ்த்தப்பட்டவர்கள் செய்ய வேண்டியது என்று ஒரு அரசே செயல்படுமானால் பொது சமூகத்தின் சாதிப்புத்தியின் பிரதிநிதியாகத் தானே அரசின் செயல்பாடும் உள்ளது?
வெள்ள நிவாரணத்தில் அத்தியாவசிய உதவிகளை மக்களுக்கு பூர்த்தி செய்த தவ்ஹித் சமாத் அமைப்பினர் தான் கழிவுகளை அகற்றும் வேலைகைளையும் தொடர்ந்து செய்து வருகின்றனர். அவர்களாலும் சென்னை குப்பைகளை அழித்தொழித்துவிட முடியுமா?
பெரும் மக்கள் கூட்டம் செய்ய வேண்டிய மிகப் பெரிய கடமையை ஒருசில நபர்களிடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
உங்கள் மலத்தை அள்ள ஒரு சாதி இருக்க வேண்டும். உங்கள் குப்பையை அள்ள ஒரு சாதி இருக்க வேண்டும். அதைக் காக்க ஒரு அரசு இருக்க வேண்டும் என்றால் இந்த சாதி ஆணவம் இன்னும் வாழத்தான் வேண்டுமா? அந்தப் பெருவெள்ளம் சாதி ஆணவத்தை அழித்தொழிக்காமல் சாதி சமூகத்தை விட்டுச் சென்றிருக்கிறதே...
இந்த ‘சாதி குப்பை’ச் சமூகத்தை சுத்தப்படுத்த இன்னும் எத்தனை பெரியார்களும் அம்பேத்கர்களும் வர வேண்டும்?
தமிழச்சி
09/12/2015

தமிழச்சி அவர்களின் முகநூல் பதிவை காண இங்கு சொடுக்கவும்


No comments:

Post a Comment