அண்மையச்செய்திகள்

Sunday 29 November 2015

முகநூல் பற்றி 1.1.2015 அன்று பொதுச்சயலாளர் ஆ.நாகராசன் அவர்கள் வெளியிட்ட பதிவு

முகநூல் பற்றி 1.1.2015 அன்று பொதுச்சயலாளர் ஆ.நாகராசன் அவர்கள் வெளியிட்ட பதிவு.
~~~~~~~~~~~

அகமும் முகமும் ஒன்றாகட்டும்!
அரசியல் வாழ்வு தெளிவாகட்டும்!!
"""""""""""""""""""""""""
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது
முன்னோர்கள் சொன்ன பழமொழி!
அதை பின்பற்றி வழிமொழிவதே முகநூல் எனும் தற்போதைய புதுமொழி!

முகநூல் என்பது படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை, நாத்திகர்கள் முதல் ஆத்திகர்கள் வரை, அரசியல்வாதிகள் முதல் அப்பாவிகள் வரை, காதலர்கள் முதல் எதிர்ப்பவர்கள் வரை, வாலிபர்கள் முதல் வயோதிகர் வரை, வணிகர்கள் முதல் வாங்குபவர்கள் வரை, தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை, பகுத்தறிவாளர்கள் முதல் பழைமைவாதிகள் வரை.

இப்படி... எண்ணற்றோரை ஈர்த்து, தங்களது அகத்தில் உள்ளவற்றை அப்படியே வெளிக்கொணர்ந்து உலகமே! பார்க்கும்படி பதிவு செய்து, பகிர்ந்துகொண்டு ஆனந்தம் கொள்ள வைக்கின்ற அனைவரும் உலாவும் ஊடகம்தான்! முகநூல்,

அந்த ஊடகத்தின் உன்னதம் உருப்படியான பல விசயங்களை உலகிற்கு பரப்பிவந்தலும், அந்த பரப்புதலோடு சேர்ந்து பகைமூட்டும் செய்திகளும் பரப்பப்படுவது, நடக்கத்தான் செய்கின்றது. அப்படிப்பட்ட எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்துகளை  சுட்டிக்காட்டுவதும் நம் கடமையகும்.

"அகத்தில் உள்ளதுதான்! முகத்தில் வெளிப்படும்"
`~~~~~~~~~~~
அகம் எண்ணுவது வார்த்தைகளாகவும், வார்த்தைகள் செயல்களாகவும் மாறி மக்களிடம் சேர்வதை அல்லது சேர்க்கப்படுவதை காலம் காலமாக இம்மக்கள் கண்டுவரும் நிகழ்வு.

அவரவர் அடிமனதில் எழும் எண்ணங்கள் அரசியலாக்கப்பட்டு, அவசியம் உள்ளதாகவும், சில நேரங்களில் தங்களது ஆத்திரத்தையும் கோபத்தையும், அன்பையும் வெறுப்பையும் கொட்டித்தீர்க்கின்ற வடிகாலாகவும். உளவியல் சார்ந்த கருவியாக தற்போது முகநூல் பயன்படுத்தப்படுகிறது.

இதை "முகநூல்" என்று சொல்வதை விட "அகநூல்" என்று, சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

இதற்கு! தந்தைபெரியாரின்  பகுத்தறிவு செயல் ஒன்றைக்கூட உதாரணமாக சொல்ல முடியும். தந்தைபெரியார் எத்தனையோ சமரசமில்லாத போராட்டங்களை முன்னெடுத்தவர், என்பது நாம் அனைவரும் அறிந்ததே!

ஒருமுறை "சாதிஒழிப்பு" மாநாடு ஒன்றை ஈரோட்டில் கூட்டியபோது அந்த மாநாட்டின் முடிவில், சாதியை ஒழிக்கும் கருத்தியலில் உறுதியாக உள்ளவர்கள்  அல்லது விரும்புகிறவர்கள் எத்தனைபேர் என்பதை தெரிந்து கொள்ள, கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்த அந்த மாநாட்டையே சோதனைக்கு உட்படுத்தினாராம்.

அதனடிப்படையில் மாநாட்டிற்கு வந்திருந்த தோழர்களிடம், அன்பார்ந்த தோழர்களே! இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் மேலும்,

மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அரங்கத்தை விட்டு வெளியேறும் போது, மாநாட்டு வரவேற்பு கூடத்தின் மேசை மீது வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில், தங்களது பெயரையும், அதோடு சேர்த்து தங்களது சாதியையும் குறித்து விட்டு செல்லுங்கள் என கேட்டுக்கொண்டாராம்.

பெரியாரின் அந்த அறிவிப்பை ஏற்று, வந்திருந்த அனைவரும் அவ்வாறே குறிக்க தொடங்கினராம்.

ஆனால், மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் மூவர் மட்டும், சாதிஒழிப்பு கருத்தியலில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றோம், எனவே எங்களது சாதியை குறிப்பிட்டு எழுதமாட்டோம் என்று உறுதியாக கூறினராம்,

அவர்களது உறுதியை கண்டு, அந்த மூன்று நபரையும் பார்த்து, தவறாக எண்ணாதீர்கள் இது ஒரு ஆய்வுக்குத்தான். நிலவுகின்ற சாதிய சமூகத்தில் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று அதிகம் விரும்புகின்றனர், என்ற புள்ளிவிபரத்தை தெரிந்து கொள்ளத்தான் என்றாராம் பெரியார்.

இருந்த போதும் அந்த மூவரும் பெரியாரின் வேண்டுகோளை ஏற்க மறுத்து கடைசிவரை சாதியை குறிப்பிடாமலேயே அடம்பிடித்தனராம்.

அப்படி அவர்கள் அடம்பிடிப்பதை பார்த்த பெரியார், உடனே ஒரு முடிவுக்கு வந்து, அந்த மூவருடைய பெயருக்கு பின்னால் ஒருவருக்கு சக்கிலியர் என்றும் மற்ற இருவருக்கு பள்ளர் என்றும் பறையர் என்றும் குறிப்பிடச்சொன்னாராம்.

அப்படி குறிப்பிட சொன்ன பெரியாரின் கூற்றைக்கேட்ட மூவரும் "கொஞ்சமும்" தாமதிக்காமல் கோபமடைந்து அய்யா "ராமசாமி நாயக்கரே" நாங்கள் உண்மையிலே முதலியார், கவுண்டர், நாயக்கர் சமூகத்தை சார்ந்தவர்கள்,

எங்களை இப்படி தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர்கள் என்று குறிப்பிட சொல்லி கேவலப்படுத்திவிட்டீர்களே! இனிமேல் எதற்கும் எங்களை அழைக்காதீர்கள் என்று, மாநாட்டு அரங்கத்தை விட்டு ஆவேசத்துடன் வெளியேறி சென்றனராம்.

அப்போது அருகில் இருந்தவர்கள் பெரியாரை பார்த்து, தயவு கூர்ந்து போகிறவர்களை அழைத்து சமாதானம் செய்யுங்கள் என்றனராம்.
         
அதற்கு பெரியார் சொன்னாராம்! வெறுமனே, நடிப்பவர்கள் எனக்கு தேவையில்லை உண்மையான உணர்வோடு ஒருசிலர் இருந்தாலே போதும், அவர்களைக் கொண்டே நான் இயக்கத்தை முன்னெடுத்து செல்வேன் போலியானவர்கள் போவதைப்பற்றி எனக்கு கவலையில்லை என்று சொன்னதோடு,

மற்றவரையும் பார்த்து உங்களுக்கும் இதில் உடன்பாடு இருந்தால் இருக்கலாம், இல்லையென்றால் நீங்களும் செல்லலாம், என்று இயல்பாக சொன்னாராம்.

அதுபோல, உள்மனதில் உறங்கி கிடக்கும் எண்ணங்கள் உணர்ச்சி வசப்பட்டுவிட்டால் அது கொஞ்சமும் தாமதிக்காமல் கொப்பளித்துக்கொண்டு வெளியே வரும் என்பதற்கு பெரியாரின் ஆய்வே சாட்சி.

"எத்தனை நாளைக்குத்தான் நானும் நல்லவன் மாதிரியே! நடிக்கிறது" என ஒரு திரைப்படத்தில், நடிகர் ஒருவர் நகைச்சுவை வசனம் ஒன்றை பேசுவார். அந்த திரைப்பட காட்சியை நகைச்சுவை என்றோ அல்லது வசனம் என்றோ நினைக்க முடியுமா?

ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் ஏதோஒரு சுயநல எண்ணம் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது, அந்த சுயநல எண்ணத்தை துரத்தியடித்து, மக்களுக்க்காவே தன்னை மாற்றி கொண்டு வாழ்ந்த மகத்தான மனிதர்கள்தான் இம்மண்ணில் நீங்கா புகழோடு நிலைத்து நிற்கின்றனர், நமக்கும் நல்வழிகாட்டி சென்றுள்ளனர்.

அரசியலில் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள்,
பிறரை எதிர்கொள்ள முடியாமல் இயலாமமையில் உள்ளவர்கள்,
பொறாமையும், வஞ்சகமும், சூழ்ச்சியும் நிறைந்தவர்கள்,
தத்துவார்த்த தெளிவு இல்லாத தற்குறிகள்,
தலைமை பண்பில்லாத தான்தோன்றிகள்,
உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டவர்கள்.

இப்படி தனது உண்மையான முகத்தை உலகுக்கு காட்டாமல்
ஒளிந்து கொண்டு பேக் ஐடி.யில் கருத்து சொல்லும் பேடிகள்,
மது, சூது, மாது என பொழுதை கழிப்பவர்கள்,
பெண்களை போகப்பொருட்களாக சித்தரிப்பவர்கள்,
ஆபாசமாக படமெடுத்து மிரட்டுபவர்கள்,

பொதுவாழ்விற்கு வரும் பெண்களை கொச்சைபடுத்துபவர்கள்,
போற்றுதலுக்குரிய நபர்களை புறம்பேசி களங்கத்தை கற்பிக்க முற்படுபவர்கள்,
அரசியலில் எதிர்கொள்ள முடியாதவர்களை
அடிபணிய வைக்க அவதூறுகளை அள்ளி வீசுபவர்கள்.

இப்படி....
எத்தனையோ முகங்கள் உலாவும் முகநூலில்
மனிதகுல மகத்துவத்தை புரிந்துகொண்டு மக்கள் விடுதலைக்காக
கருத்துப்போர் தொடுப்பவர்கள்,
இயக்க செயல்பாடுகளை பதிவேற்றம் செய்து மக்கள் பிரச்சினைகளை மைய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று
மாற்றத்தை நோக்கி மக்களை அரசியல் படுத்துபவர்கள் என...

எண்ணற்ற முகங்களையும்,  கதாபாத்திரங்களையும் தனக்குள் வைத்துக்கொண்டு இயங்கும் முகநூல் சரியானவற்றையும், தவறானவற்றையும் சேர்த்தே சுமந்துகொண்டு, வலைத்தள உலகத்தில் வலம் வருகிறது.

"விஞ்ஞான வளர்ச்சி" என்பது மனிதகுல விடுதலைக்கான ஆயுதமாக பயன்பட வேண்டுமே தவிர, பிறரை தவறான முறையில் சித்தரித்து வசைபாடுவதற்கும், வஞ்சகம் தீர்த்துக்கொள்வதற்கும் அல்ல.

இதை புரிந்து கொண்டு ஆக்கபூர்வமான செயல்களுக்கும், அல்லல்படும் அடித்தட்டு மக்களின் விடுதலைக்கும் முகநூல் போன்ற வலைத்தளங்களை ஆயுதமாக பயன்படுத்துவோம்.

வரலாறு என்பது, சரியும்! தவறும்! கலந்ததுதான்,
அதில் தவறுகளை கலைந்து விட்டு, சரியானவற்றை எடுத்துக்கொண்டு முன்னேறி செல்வதை போல்! முகநூலையும் சரியான வழியில் பயன்படுத்தி முன்னேற்ற பாதையில் பயணிப்போம்.

முகநூலும், டுவிட்டரும்தான்! மத்தியில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணியாக இருந்துள்ளது. எனவே அதை சரியாக புரிந்துகொண்டு அடித்தட்டு மக்களின் விடுதலைக்கான ஆயுதமாக பயன்படுத்தி அரசியலில் அடியெடுத்து வைப்பதே அறிவார்ந்த செயலாகும்.

எனவே இதை முகநூல் என்று சொல்வதை விட அகநூல் என்று சொல்வதே பொறுத்தமாக இருக்கும்.
_________________
அகமும் முகமும் ஒன்றாகட்டும்!
அரசியல் வாழ்வு தெளிவாகட்டும்!!
""""""""""'''''''""""""'''''''"                                                                       தோழமையுடன்,
ஆ.நாகராசன்,
பொதுச்செயலாளர்.
ஆதித்தமிழர் பேரவை.
   
▶ 1.1.2015

No comments:

Post a Comment