அண்மையச்செய்திகள்

Tuesday 27 October 2015

கழிவுநீர் தொட்டி அடைப்பை நீக்க கட்டாயப்படுத்தி, இருவர் உயிரிழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.

கழிவுநீர் தொட்டி அடைப்பை நீக்க கட்டாயப்படுத்தி, இருவர் உயிரிழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது. October 15 -2015
""""""""""""""""""""""""""""""""""""""
மதுரை ஆரப்பாளையம் அருகில் உள்ள கழிவுநீர் வெளியேற்றும் (லிப்ட்டில்) கிடங்கின் 20 அடி ஆழத்தில் உள்ள கழிவடைப்பை நீக்க விஸ்வநாதன், முனியாண்டி ஆகிய இரண்டு ஒப்பந்த தூய்மைத் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி பணிசெய்ய வைத்த காண்ட்ராக்டர் தாஸ் என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் மாநாகராட்சி நிர்வாகத்தையும் காவல்துறையையும் வலியுறுத்தி வருகின்றது.
ஆனால் சம்மந்தப்பட்ட காண்ட்ராக்டர் தாஸ் என்பவர் அதிமுக அமைச்சர் செல்லூர்.ராஜு அவர்களின் உறவினர் என்பதனால், நிர்வாகங்கம் சட்டப்படி புரிய வேண்டிய கடமையை புறக்கணித்து குற்றவாளிக்கு சாதகமாக நடந்து வருவது மாபெறும் கண்டனத்துக்குறியது.
மனிதக் கழிவை மனிதன் அகற்றுவதற்கு தடைவிதித்து 1993.ல் சட்டம் இயற்றப்பட்டு அந்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் தொடுத்த வழக்கின் காரணமாக கடந்த 2013 செப்டம்பர் 10 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கின்றது.
அந்த தீர்ப்பின் அடிப்படையில் கட்டாயப்படுத்தி கழிவுகளை அகற்ற வற்புறுத்தும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிட வேண்டும் எனவும், 1993 முதல் விஷ வாயு தாக்கி பலியானவர்களை கணக்கெடுத்து அவர்களது கும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், கையால் மலமள்ளும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
அப்படி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அனைத்து பரிந்துரைகளையும் மாநில அரசுகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரையும் வழங்கியுள்ள நிலையில் அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டதோடு,
ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொண்டதிற்கிணங்க. கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட தூய்மை தொழிலாளர்களுக்கான நலவாரியத்தையும் முடக்கி வைத்திருப்பது, தூய்மை தொழிலாளர்கள் மீதான தமிழக அரசின் அக்கறையின்மையையே காட்டுகின்றது.
இந்நிலையில் 1993 முதல் இன்றுவரை விஷ வாயு தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும் மனித உரிமைகள் அமைப்புகள் எடுத்திருக்கும் புள்ளிவிபர கணக்கு சொல்வது சுமார் 283 பேர் என்று.
நிலைமை இப்படியிருக்க, விவசாயிகள் சேற்றில் 'கால்' வைத்தால்தான் மனிதன் சோற்றில் 'கை' வைக்கமுடியும் என மேடைக்கு மேடை முழங்கும் அரசியல் வாதிகள், சோற்றை அள்ளும் கையாலேயே! மலத்தை அள்ளும் இந்த மனிதனின் அவலத்தைப்பற்றி பேசுவதற்கு மனமில்லாமல் மௌனம் சாதிப்பது மிகவும் வேதனையளிக்கின்றது.
இந்த லட்சணத்தில் இந்தியாவில் இன்னும் 11.5 லட்சம் தொழிலாளிகள் கையால் மலத்தை அள்ளி தலையில் சுமக்கின்றனர் என்ற புள்ளி விபரத்தையும் மத்திய அரசே வெக்கமில்லாமல் வெளியிட்டுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோயில் கட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட கழிவறை கட்டுவதற்குதான் முக்கியத்துவம் கொடுப்போம் என்று ஆட்சியை பிடித்த மோடி அரசு, தற்போது தூய்மை இந்தியா நாடகத்தை நடத்தி நடிகர் நடிகைகளையும் களத்தில் இறக்கி விட்டு வேடிக்கை காட்டுகின்றது. அதற்கான விளப்பரத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாயையும் வீணாக செலவு செய்கின்றது.
மோடி அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பு ஒரு மோசடி அறிவிப்பு என்று, அறிவிக்கப்பட்ட அதேநாளில் லண்டன் பிபிசி வானொலிக்கு பேட்டி ஒன்றை ஆதித்தமிழர் பேரவை கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காரணம் உண்மையான தூய்மை இந்தியாவை நாம் காண விரும்பினால் முதலில் தூய்மை பணிபுரிவோரின் நிலைகளைப்பற்றிய விரிவான ஆய்வுகளை நடத்தி அதனடிப்படையில் அவர்களின் மறுவாழ்விற்கு ஆவன செய்வதோடு, கையால் மலமள்ளுவதை தடுத்திட நவீன எந்திரங்களை இறக்குமதி செய்து அதன் மூலமாக கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தேன்.
எனவே ஆளும் அரசுகள் வெறும் விளம்பர அரசியல் நடத்தாமல் உண்மையாகவே ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசியல் தலையீடு இல்லாமல் சட்டத்தையும், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையும் முழுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு.
மதுரையில் விஷ வாயு தாக்கி பலியான இருவரின் குடும்பத்தாருக்கு தாமதமின்றி தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதோடு, கட்டாயப்படுத்தி கழிவடைப்பை நீக்கச்சொல்லி வற்புறுத்திய ஒப்பந்ததாரர் தாஸின் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.
விஷ வாயு தாக்கி உயிரிழந்த விஸ்வநாதன் மற்றும் முனியாண்டியை இழந்து வாடும் அவர்களது கும்பத்தாருக்கு ஆதித்தமிழர் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறது.
தோழமையுடன்,
இரா.அதியமான்,
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை

No comments:

Post a Comment